×

அன்பு மகளே..!

நன்றி குங்குமம் தோழி

தனது X தளத்தில் “அன்பு மகளே…” எனத் தலைப்பிட்டு சிறுமியாக இருக்கும் மகள் பவதாரிணியோடு தான் இருக்கும் புகைப் படத்தை இசைஞானி பதிவேற்றியிருப்பது பார்ப்பவரை நெகிழ வைக்கிறது. மகளுக்கும் அப்பாவுக்குமான உறவு வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒன்று. தன் செல்ல மகளை கல்லீரல் புற்றுநோய்க்கு பறிகொடுத்திருக்கிறார் இளையராஜா. உயிரற்ற மகளின் உடலை முதுமையில் தந்தை சுமந்து உடன் பயணிப்பது யாருக்கும் நிகழக்கூடாத பெருந்துயரம்.

பாடகி பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, தியாகராயா நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டது. பிறகு சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்திற்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.தனது இசையால்… தனது குரலால்… தனது ஆளுமையால் பலரையும் கட்டிப்போட்டவர் பவதாரிணி. அவரது குரலின் தனித் தன்மையே பவதாரிணியை தனியாக அடையாளப்படுத்தும். திரையிசை பயணத்தின் தொடக்கம் முதலே தந்தை இளையராஜா, அண்ணன் கார்த்திக் ராஜா, தம்பி யுவன் ஷங்கர் ராஜா இசையில் தொடர்ந்து பயணித்தவர்.

1984ல் வெளியான மைடியர் குட்டிச்சாத்தான் மலையாள படத்தில் குழந்தை பாடகியாய் அறிமுகமாகி, பின்னர் தந்தை இளையராஜா இசையில் “ராசய்யா” படத்தில் ‘மஸ்தானா மஸ்தானா’ பாடலோடு தமிழ்த் திரையுலகிலும் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி. “காதலுக்கு மரியாதை” படத்தில் ‘என்னை தாலாட்ட வருவாளா’ பாடல் பவதாரிணியின் குரலில் இளைஞர்களை கட்டிப்போட்டது என்றே சொல்லலாம்.இளையராஜா இசையில் வெளியான “பாரதி” படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடல் பவதாரிணிக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ‘‘அழகி’’ படத்தில் அவர் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ பாடல் மிகப்பெரிய அளவில் பவதாரிணிக்கு ஹிட் கொடுத்தது. பத்து படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் பவதாரிணி.

புற்றுநோயின் இறுதி நிலையில், இலங்கை மருத்துவமனை ஒன்றில் ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த பவதாரிணி ஜனவரி 25ம் தேதி மாலை காலமானார். மருத்துவம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கும் நிலையில், கலை சார்ந்த படைப்பாளியின் மரணம் என்பது மிகப் பெரிய இழப்பாக இருக்கிறது. ஆரம்பகட்ட புற்றுநோய் குணப் படுத்தக்கூடிய நிலை அல்லது வாழ்க்கையை கூடுதலாக இன்னும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் நிலை. இதில் முடி இழந்து… உடல் மெலிந்து… புற்று நோயிலிருந்து பழைய நிலைக்கு மீண்டு வாழ்பவர்களும் உண்டு. இனி எந்த மருத்துவமும் பண்ண முடியாது என கைவிட்ட சூழலில் பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

“மயிலிறகு போல நான் மிதந்து விளையாடுவேன்… உன் உயிர் கூட்டிலே…” என இளையராஜாவுக்காக இரண்டு வரிகளை பாடி பதிவேற்றியுள்ள பவதாரிணி, மீண்டும் அவருக்கே மகளாய் பிறக்க வேண்டும் என்கிற தனது ஆசையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். பவதாரிணி போன்ற ஆளுமையின் மரணம் இங்கே சிந்திக்க வேண்டிய ஒன்றாய் இருக்கிறது. உடல் சார்ந்த பிரச்னைகளை ஆண்கள் வெளியில் சொல்வதற்கும், பெண்கள் வெளியில் சொல்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உண்டு. பெண்கள் தங்கள் உடம்பை எந்த அளவு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையே பவதாரிணியின் இறப்பு பெண்களுக்கு உணர்த்திச் செல்கிறது.இசைஞானி வீட்டின் இசைவாணிக்கு அஞ்சலி…

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post அன்பு மகளே..! appeared first on Dinakaran.

Tags : Kumkum Dodhi ,Bhavatharini ,
× RELATED புளிய மரங்கள் சொல்லும் கதை!